×

தீபாவளியும் அன்னப்பூரணியும்!

தீபாவளி புண்ணிய தினத்தன்று அன்னப்பூரணிக்கு தங்கக் குத்து விளக்கு ஏற்றுவார்கள். அப்போது ஈஸ்வரனுக்கு தங்கக் கரண்டியில் அன்னை அன்னம் வழங்கும் வைபவம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். தீபாவளிக்கு முந்தைய ‘தனதிரயோதசி’ அன்று தங்க அன்னப்பூரணிக்கு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். ஆனால் அன்று திரை போட்டு விடுவதால் அம்பிகையை தரிசிக்க இயலாது. மறு நாளான சோடி தீபாவளி அன்று தரிசனம் கிடைக்கும். அன்று பொரியுடன் பத்து பைசா நாணயம் பிரசாதமாக அளிக்கப்படும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

*தீபாவளியன்று அன்னப்பூரணிக்கு குபேர பூஜை மற்றும் ‘அன்னகூட’ வைபவம் நடைபெறுகிறது. அன்னையின் முன்னால் அன்னத்தை மலைபோல் குவித்து வைப்பதுடன் முப்பது பெரிய தட்டுகளில் பலவித இனிப்புப் பண்டங்களையும் வைத்துப் படைப்பர். இறைவனுக்கு அன்னமிட்ட பின்னர், அந்த இனிப்புப் பண்டங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதை ‘மிட்டாய்த் திருவிழா’ என்று கூறுவர். அன்று மக்கள் கங்கா ஸ்நானம் செய்து விட்டு அன்னப்பூரணியை தரிசிக்கின்றனர்.தீபாவளி அன்று லட்டுக்களாலான திருத்தேரில் அன்னப்பூரணி பவனி வருகிறாள். பிறகு அந்த லட்டுக்களை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள்.

*மாலை வேளையில் வீட்டின் வெளிப்புறம் தீபம் ஏற்றி வைத்தால் எமதர்மனுக்கு திருப்தி ஏற்படும் என்கிறது பவிஷ்யோத்திர புராணம். தீபாவளி அன்று எம தீபம் ஏற்றுவதால் அந்தக் குடும்பத்தில் எவருக்கும் அகால மரணம் நேராது. நரக பயம் இல்லை என்றும் அது கூறுகிறது. யமுனையின் சகோதரனான எமதர்மராஜாவை தீப ஒளிகளால் பூஜித்து நீண்ட ஆயுளைப் பெறலாம். இதைச் சகோதரிகள் சகோதரர்களுக்காக பூஜிக்க வேண்டும்.

*சீக்கியர்களின் புனித ஸ்தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலும் அவர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்த் மற்றும் 52 பேர்களையும் விடுதலை செய்ததைக் கொண்டாடும் விதத்தில் தீபாவளி தினமாக சீக்கியர்கள் கொண்டாடுகிறார்கள். இதை பந்த்சோர் தீபாவளி என்பர். அன்று வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

*தீபாவளி தினத்தன்று ஜைனர்கள் தீபஅலங்காரம் செய்து மகாவீரருக்கு பூஜை நடத்தி வெகு விமரிசையாக தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

*வடமாநிலங்களில் தீபாவளி அன்று லட்சுமி வீட்டில் தங்குவதாக ஐதீகம். அமாவாசையன்று பூஜையறையில் இருபத்து நான்கு மணி நேரமும் ஒரு விளக்கு எரியும். இந்த விளக்கிலிருந்து எடுக்கப்படும் கண் மையைத் தான் ஆண்டு முழுவதும் உபயோகிக்கிறார்கள். இதை மோனி தீபாவளி என்கிறார்கள்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

The post தீபாவளியும் அன்னப்பூரணியும்! appeared first on Dinakaran.

Tags : Diwali Punic Day ,Annapurani ,Annam ,
× RELATED பாயச அன்னம்